திருவள்ளுவர் காட்டும் ஏ ழாம் அறிவு

 

உலகில் தோன்றிய உயிரினங்கள் அனைத்தும் அறிவு பெற்றவையாக உள்ளன.அவற்றின் உணரும் சக்திக்கேற்ப ஓரறிவு,ஈரறிவு,மூவறிவு,நாலறிவு,ஐந்தறிவு,ஆறறிவு உயிர்கள் எனப் பகுத்துக் காட்டியவர் நம் தொல்பழமை பாட்டனான தொல்காப்பியர்.

ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
              இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
- (தொல்காப்பியம் மரபியல்)


இவற்றுள் முதல் ஐந்தறிவு தோல்,வாய்,மூக்கு,கண்,காது ஆகியவை துளையிட்டுக்கொண்டு வெளிப்படும் ஐம்பொறிகள்.ஆறாம் அறிவாகிய மனம் துளையிடப்படாமல் வெளிப்படுவது ஆகும்.

ஓரறிவு முதல் ஆறறிவு வரை இன்பம் நுகரும் ஆவல் கொண்ட உயிரினமே உலகில் பரந்து விரிந்துள்ளன எனலாம்.

புல்லும்,மரமும் உற்றறியும் தொடு உணர்வைக் கொண்டஓரறிவு உயிரினமாகும்.
நத்தை,சிப்பி போன்றவை தொடு உணர்வோடு உண்ணுதல் என இரண்டறிவுப் பெற்ற உயிரினமாகும்.

எறும்பு,சிதல்(கரையான்) போன்ற உயிரினங்கள் மெய்யால் தொடும் உண்ர்வு வாயால் பூசிக்கும் உணர்வோடு மூக்கால் முகரும் அறிவு ஆகிய மூன்றறிவு உயிரினமாகும்.

நீரிலும், நிலத்திலும் , வானத்திலும் வாழும் முதலை,ஆடு ,மாடு, குரங்கு,பறவைகள் தொடு உணர்ச்சியறிவு,வாயால் சுவைக்கும் அறிவு, கண்களால் பார்க்கும் அறிவு ,காதால் கேட்கும் அறிவையும் சேர்த்து ஐந்தறிவு உயிரினமாகும்.
உயிரின படைப்பில் உயரிய படைப்பாக, மேற்கூறிய ஐந்தறிவுகளோடு சிந்தித்துச்செயல்படும் திறன் கொண்ட மனம் என்னும் ஆறாம் அறிவைப் பெற்ற உயிரினமாக மனிதைனம் திகழ்கிறது.

ஆனால், ஆறாம் அறிவுக்கும் மேலானதாக ஏழாம் அறிவு என்று ஒன்றுள்ளதாகப் பல அறிஞர்களும்,சான்றோர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர்.2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருவள்ளுவர் கூட எடுத்துக் காட்டியுள்ளார்.அந்த ஏழாம் அறிவு என்பது எது ...?

ஐயப் படாஅது அகத்தது உண்ர்வானைத்
தெய்வத்தொடு ஒப்பக் கொளல் (702 திருக்குறள்)

சிறிதும் ஐயமே இல்லாத வகையில் எதிரில் உள்ளவரின் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை முழுமையாக உணர்ந்தும்,தன் எண்ணத்தை அவர்க்கு உணர்த்தி இயங்க வைக்கும் வலிமைக் கொண்டவரைத் தெய்வத்தோடு இணையாக வைத்துப் போற்ற வேண்டும்.


திருவள்ளுவர் இதையே ஏழாம் அறிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆறறிவுடைய மனிதன் அந்த ஏழாம் அறிவை எப்படிப் பெற முடியும்...? அதற்கும் திருவள்ளுவர் திருக்குறளிலேயே விடையை வைத்திருக்கிறார்.தவன் என்னும் அதிகாரத்தில்,
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு (269 திருக்குறள் )


தவனெறியின் மூலம் ஆன்ம ஆற்றலைப் பெற்றவர்கள் , எமனியும் எதிர் நின்று மரணத்தைத் தாண்டி வெற்றி கொண்டு நீண்ட நாட்கள் வாழும் வலிமையுடையவராக இருப்பர் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

தவத்தின் மூலம் ஆற்றலை எப்படிப் பெற முடியும்..?

மனத்தை ஒருனிலைப்படுத்துவதே தியானம். நீண்ட நேரம் தியானத்தில் அமர்வதே தவம் எனப்படும்.நாம் உள்ளிளுக்கும் மூச்சுக் காற்றை(உயிர்வளி) தேவையான கால அளவுக்கு உள் நிறுத்திப் பின் வெளியிடும் பயிற்சியைத் தொடர்ந்துச் செய்யும்போது மனம் முற்றிலும் அடங்கி ஒடுங்கும். இன் நிலையை நிஸ்டை எனவும் கூறுவர்.அப்போது காலம்.இடம்,நிகழ்ச்சிகள் யாவும் பொருளற்றவை ஆகிவிடும். மனம் மேலும் மேலும் ஒடுங்க தன் உருவம் மறந்து உயிரில் உயிராய் கலந்து நிற்கும்.அங்கு ஆன்மா ஒளிர்ந்து நிற்கும்.இதையே ஆன்ம தரிசனம் என்பர்.இதனைப் படிபடியாய் செய்வதால் துரிய நிலை,முக்தி நிலை,பிரம்மானந்த நிலை,பேரின்ப நிலை என பலபெயரில் குறிப்பிடுவர்.

இந்த உணர்ச்சி நம் உடலில் உயிருக்குள்ளேயே அனுபவிக்க வேண்டியது .இந்த நிலையை அடைய தியானமே அடிப்படையாகும்.

இந்த நிலையைப் பல ஆண்டுகள் பயிற்சி செய்து வந்தால் முன்னர் திருவள்ளுவர் கூறிய சந்தேகத்திற்கிடமில்லாமல் தன் எதிரில் நிற்பவரின் உள்ளத்தில் உள்ளக் கருத்தினை அறிந்துக் கொள்வதுடன் , தான் நினைக்கும் செயகை அவர் மந்த்தில் செலுத்தி செய்துக் கொள்ளும் வலிமைப் பெற்றவராக ஏழாம் அறிவைப் பெற்றவராக இப் பூமியில் வலம் வரலாம்.

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும் (திருக்குறள் 265)

- திருக்குறள் எழில் சோம. பொன்னுசாமி
திண்ணூர்தி தொழிற்சாலை , ஆவடி


 

 

 

 

 

 

 

 

- www.tamilsudar.com 

'திருக்குறளின் மீது உறுதிமொழி'

உறுதிமொழி ஏற்கும் ஜூனிதா நாதன்
திருக்குறள் நூல் உலகப் பொது மறை என்று தமிழர்களால் வலியுறுத்தப்படுகிறது.அதனை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்றும் நாம் குரல்கொடுத்து வருகிறோம்..நீதிமன்றங்களில் கீதையின் பெயரால் உறுதிமொழி எடுப்பதற்குப் பதிலாக திருக்குறளை பயன்படுத்த வேண்டும் என்றும் நீண்ட காலமாக குரல் கொடுத்தும் இன்னமும் அது நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், கனடாவில். ஒரு பெண் திருக்குறளின் மீது உறுதிமொழி எடுத்து பதவியேற்று சாதனை புரிந்திருக்கிறார். கனாடாவின் மர்கம் (markham asea - 4) பகுதியில் பொதுப்பள்ளி வாரியத்துக்கான 2010 - தேர்தலில் போட்டியிட்ட ஜூனிதா நாதன் அவர்கள் 60 விழுக்காடு வாக்குகள் பெற்று, வெற்றி பெற்று கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உறுப்பினர் பதவி ஏற்றுக் கொண்டார்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக ஒரு தமிழ்ப்பெண் (ஜூனிதா நாதன்) போட்டியிட்டு பெற்றி பெற்றது ஒரு சாதனையாகப் போற்றப்படுகிறது. அதைவிடச் சிறப்பு, அவர் திருக்குறளின் மீது உறுதிமொழி கூறி பதவி ஏற்றுக் கொண்டதுதான்

 

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------

- மோசெகு

திருக்குறள் தோன்றியது தமிழில் என்றாலும், அது, தமிழ்நாட்டையோ, தமிழ்மொழியையோ,
தமிழ் இனத்தையோ, தமிழ் மன்னர்களையோ எந்த இடத்திலும் சுட்டிக்காட்டாத பொதுமை
கொண்டது. திருக்குறள் சுட்டும் நாட்டின் இலக்கணம் எந்த நாட்டுக்கும்
பொருந்தும். இந்தியப் பண்புகளுள் சிறந்ததான, மதச்சார்பின்மைக்கு நல்லிலக்கியமாக
மலர்ந்துள்ள இத்திருக்குறள் கடவுளை மறுக்கவில்லை. அதே சமயம், எந்தச்
சமயத்தையும் முன்னிறுத்தவில்லை. இல்லறத்தாருக்கும் நல்லறம் புகலும்
இவ்விலக்கியம், துறவறத்தாரையும் இணைத்துச் சிந்திக்கிறது. தன்னளவில் உள்ள
பண்புகளை விட்டுக்கொடுக்காமலும், உலக அளவில் நேயம் பேணுவதையும் முன்னிறுத்தி,
எல்லாச் சாதியினருக்கும், எல்லாச் சமயத்தாருக்கும், எல்லா இனத்தவருக்கும்,
எல்லா மொழியினருக்கும் ஏற்ற நீதியை, இந்தியப் பொது அறத்தை நடுநிலைமையோடு
மொழிகிற உன்னத இலக்கியம் திருக்குறள்.கார்லைல் என்ற பேராசிரியர், ""மக்களை
இணைத்துப் பிணைக்க வலிமை பெற்ற ஒரு தேசிய இலக்கியம் வேண்டும்'' என்று
குறிப்பிடுகிறார். அந்த வகையில், இந்தியத் திருநாட்டிற்கு ஏற்ற தேசிய இலக்கியம்
திருக்குறள்தான்.""இந்தியப் பேரரசு இந்திய ஒருமைப்பாட்டைப் பெரிதும்
விரும்புகிறது. விரும்பி வலியுறுத்துகிறது. இந்திய நாட்டின் இணையற்ற தேசிய
இலக்கியமாகத் திருக்குறளை ஏற்றுக்கொண்டு, இந்தியத் திருநாட்டு மக்கள்
அனைவரையும் திருக்குறள் சிந்தனையிலும், திருக்குறள் நெறி வாழ்க்கையிலும்
ஈடுபடச் செய்தால் இந்திய ஒருமைப்பாடு தானே உருவாகும்'' என்பார் திருக்குறளுக்கு
இயக்கம் கண்ட குன்றக்குடி அடிகளார்.தவஞானி ஸ்ரீஅரவிந்தர், தமிழ் கற்றதோடு,
திருக்குறளின் முதல் இரு அதிகாரங்களையும் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்திருக்கிறார். அவர் "இந்தியாவின் ஆன்மா' என்ற நூலில் திருக்குறட்
பெருமையை, இந்திய இலக்கியங்களோடு இனிது ஒப்பிட்டுப் பின்வருமாறு
விளக்குகிறார்.""பிரதேச மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் பெரும்பாலும்
இசைப்பாடல்கள், பக்திப்பாடல்கள், காதல்-வீரப்பாடல்கள் முதலியவைகளே. ஆனால்
வேறுபாடுகளும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிர ஞானியான
ராமதாசரின் சமய ஒழுக்கப்பாடல்களையும், அரசியல் கருத்தமைந்த பாடல்களையும்
திருவள்ளுவநாயனார் இயற்றிய திருக்குறளையும் குறிப்பிடலாம். அதன்
கட்டுக்கோப்பிலும், எண்ணத்தின் திண்மையிலும் சொல்லாட்சித் திறனிலும்
திருக்குறள் குறுவடிவில் பொதுவான உண்மைகளை வெளியிடும் கவிதை வகையில் தலைசிறந்து
விளங்குகின்றது'' என்கிறார்."திருக்குறளின் உறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும்
விரிவும் அழகும் கருதி, தமிழச்சாதி அமரத்தன்மை உடையது' என்று பாடிய பாரதியாரின்
உள்ளக்கிடக்கையோடு ஒத்துப்போகிறது அரவிந்தர்தம் திருக்குறள் பற்றிய
கருத்தோட்டம். இந்தியச் சிந்தனையாளர்களோடு, ஏனைய தமிழ் ஞானிகளையும்
முன்னிறுத்தித் திருவள்ளுவரைப் போற்றுகிறார் அரவிந்தர்.இந்தியர் மட்டுமன்றி,
உலகப் பேரறிஞர்கள் பலரும் உவந்து போற்றி, ஏற்றுக் கொண்ட பெருமை திருக்குறளுக்கு
உண்டு. ஐரோப்பியத் தமிழறிஞரான பெஸ்கி பாதிரியார், 1730-இல் முப்பாலான
திருக்குறள் முதலிரு பால்களையும், லத்தீனில் மொழிபெயர்த்தார்.தலைசிறந்த
பிரெஞ்சுமேதை எம்.ஏரியல், 1848-இல் திருக்குறளின் சில பகுதிகளை பிரெஞ்சில்
மொழிபெயர்த்தார். அவருக்கு முன்பே, 1730-இல் பெயர் தெரியாத ஓர் ஆசிரியர் செய்த
பிரெஞ்சு மொழிபெயர்ப்பை நினைவுகூரும் அவர், திருக்குறள் ஃபிரான்சு தேசத்தின்
தேசிய நூலகத்தில் இருப்பதையும் சுட்டுகிறார்.ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர்
கிராஸ் என்பாருக்குத் திருக்குறளின் ஆங்கில நூல் ஒன்று பரிசளிக்கப்பட்டது.
திருக்குறளின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட அவர், மூலத்தில் படிப்பதற்காகவே தமிழ்
கற்றார். பின்னர், 1854-இல் ஜெர்மனியிலும், 1856-இல் லத்தீனிலும்
மொழிபெயர்த்தார். எனினும், அதனால் திருப்தியுறாத அவர், ""எந்த மொழிபெயர்ப்பும்
மனங்கவரும் அதன் மாண்பினை வெளிக்கொணரமுடியாது. அது உண்மையில் வெள்ளி வேலைப்பாடு
கொண்ட தங்க ஆப்பிள் கனி'' என்று அறிவித்தார்.தமிழ்மாணவன் என்று தம்மை
அழைத்துக்கொண்ட ஜி.யு.போப், 1886-இல் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத்
தந்திருக்கிறார். அவர், திருக்குறளை முன்வைத்து மொழிந்த வாசகங்கள் வரலாற்றுச்
சிறப்புமிக்கவை. ""குறளுக்குப் புகழ் சேர்க்கும் மிக முக்கிய அம்சம், அதன்
இணையற்ற கவிதை வடிவம். அந்தத் தலைசிறந்த தமிழ்ச் சொல்லோவியரின் கூற்றுக்கு இந்த
வடிவம் செறிவினைக் கொடுத்திருக்கிறது'' என்று திருவள்ளுவருக்குப் புகழாரம்
சூட்டி மகிழ்கிறார்.இவ்வாறு, திருக்குறளை உணர்ந்து ஓதிய பெருமக்கள் தத்தம்
மொழிகளில், அதனை மொழியாக்கம் செய்து மேன்மை பெற்றிருக்கிறார்கள். இதுவரையில்
நரிக்குறவர்கள் பேசும் "வாக்ரிபோலி' உள்ளிட்ட 34 மொழிகளில்,
திருக்குறளுக்கென்று 130 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் மட்டும்
சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன. லத்தீன், ஜெர்மன்,
ஃபிரெஞ்ச், டச்சு, பின்னிஷ், போலிஷ், ரஷ்யன், சீனம், பிஜி, மலாய், பர்மியம்
ஆகிய அயல்நாட்டு மொழிகளிலும், வடமொழி, இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம் ஆகிய
இந்திய மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இத்தகு மேன்மை கொண்ட
திருக்குறள் இந்தியாவின் தேசிய நூலாகட்டும். திருவள்ளுவ நெறியில் மனிதகுலம்
உயரட்டும்

----------------------------------------------------------------------------------------------------------------------------

- கவிஞர் இரா.ரவி

திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி இல்லை,திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி மொழியே இல்லை. உலக பொது
மொழிகள் அனைத்திலும் பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். உலகப் பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மைய அரசுக்கு இன்னும் மனம் வரவில்லை என்பது வேதனை.
திருக்குறளுக்கு பரிமேலழகர் தொடங்கி,பல்வேறு அறிஞர்கள் உரை எழுதி
இருக்கிறார்கள்.ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு சுவையாக இருக்கும். படிக்கப் படிக்க திகட்டாத ஒப்பில்லா இலக்கியம் திருக்குறள். 

 

 

Make a free website with Yola